×

கர்நாடகாவின் அடாவடியால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் பாலைவனமாகும் டெல்டா பாசனத்தை பாழாக்கும் மேகதாது அணை திட்டம்

* மழையால் கிடைக்கும் உபரிநீர்கூட வராது  
* சட்டப்போருக்கு தயாராகிறது தமிழ்நாடு

சேலம்: கர்நாடக அரசு நீதிமன்ற வழக்குகள், ஆணையத்தை மதிக்காமல் அத்துமீறி கட்டுவதற்கு ஆயத்தமாகும் மேகதாது அணையால் தமிழகத்தின் டெல்டா பாசனம் பாழாகி விடும். இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் முறையிட்டுள்ளார். அதேநேரத்தில்  காவிரி நீர் உரிமைக்காக மீண்டும் ஒரு சட்டப்போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முறைப்படுத்தவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீரை சேமித்து பெங்களூரூ மக்கள் குடிநீர் தேவைக்கு வழங்கவும் மேகதாது அணை கட்டப்படுகிறது. எனவே, இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யக்கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், கர்நாடகத்தின் வாய்ஜாலம் காட்டி தமிழகத்தை தந்திரமாக ஏமாற்றி வருவதை காலம் காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்தை பாழாக்கவே மேகதாது அணை கட்டும் திட்டத்தை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அதோடு, அணை கட்டப்பட்டால் மீண்டும் காவிரி நீருக்காக, ஒரு சட்டப்போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும் என்று நீர்வள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது : காவிரி நீரால் தமிழகத்தின் 12 டெல்டா மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டர் பரப்பளவு பாசன வசதி பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து, காவிரி நீரின் தேவை குறையும்.

இதன்மூலம் 34.20 லட்சம் டன், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மட்டும் 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதேபோல் 18 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் தான். கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தினமும் ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும். இவ்வாறு ஆண்டு முழுவதும் திறப்பதற்கு, குறைந்த பட்சம் 30 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால், கடந்தாண்டில் கர்நாடகம் பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து மொத்தமாக 67 டிஎம்சி நீரை மட்டுமே வழங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் கபினி, கேஆர்எஸ் அணைகளில் திறக்கப்படும் நீரை சேமித்து, தங்கள் மாநில பாசனப்பகுதிகளுக்கு திருப்ப, கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணையை கட்டினால் தமிழகத்திற்கான தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்ற வாதத்தை அங்குள்ள அமைச்சர்களும், அதிகாரிகளும் முன்வைக்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு என்று எதையும் மதிக்காத கர்நாடகம், இப்படி கூறுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. மேகதாது அணை நீரை கர்நாடகத்தின் பாசனத்துக்கு பயன்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களில் உள்ள மைசூர், சாம்ராஜ்நகர், தும்கூர் மாவட்டங்களில் ரூ.1,885 கோடியில் 490 ஏரி, குளங்களை சீரமைத்து கூடுதல் நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் பெருமழைக்காலங்களில் காவிரி உபரிநீர் கூட, தமிழகத்துக்கு வரமுடியாத நிலையே உருவாகும். காவிரி மேலாண்மை வாரிய இறுதி தீர்ப்பில், இனிமேல் காவிரியின் குறுக்கே எந்த மாநில அரசும் அணை கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அப்படி இருந்தும் அங்கு பாஜ ஆட்சியில் இருப்பதால் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்திருப்பது வேதனைக்குரியது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் 192 டிஎம்சியாக இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அதனை 177.25 டிஎம்சியாக குறைத்து விட்டது. ஏற்கனவே 104 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் கர்நாடகம், மேகதாது அணையை கட்டிவிட்டால் 154 டிஎம்சி தண்ணீரை தன்னகத்தே வைத்துக் கொள்ளும். இதனால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீருக்கு கண்டிப்பாக சிக்கல் வரும். நாம், மீண்டும் கர்நாடகாவிடம் காவிரி தண்ணீர் கேட்டு மேலும் ஒரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகும். எனவே, மேகதாது அணையை தடுத்து நிறுத்தி, தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுப்பது தமிழக மக்கள் அனைவரின் கடமை. இந்த விஷயத்தில் கட்சிகள் அரசியல் செய்யாமல் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு குரல் எழுப்ப வேண்டும். கர்நாடக அரசியல் கட்சிகளிடம் இந்த விஷயத்தில் உள்ள ஒற்றுமை, இங்கும் வரவேண்டும். அரசியல் நோக்கத்தோடு சித்து விளையாட்டில் ஈடுபட்டால் வருங்கால சமுதாயம் அவர்களை மன்னிக்காது.இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தீர்ப்புகளை மீறுவதே கர்நாடகாவின் வழக்கம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து, அணை கட்டுவதற்கான அனுமதியை கர்நாடகம் கோரியது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்குமாறு கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்துக்கு நீதி வழங்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தமிழ்நாடு அரசு தட்டியது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முடியாது. ஆனால், அந்த தீர்ப்புகளை மீறும் வகையில் கர்நாடகம் காய்களை நகர்த்தி வருகிறது.

சென்னையும் பாதிக்கப்படும்
டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை உள்பட 11 மாவட்டங்கள் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் காவிரியைத்தான் நம்பி இருக்கிறது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரியில் இருந்து வரும் காவிரி நீரின் பங்களிப்பும் உள்ளது. ஒட்டு மொத்தமாக காவிரி நீரின் மூலம் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அந்த நதியில் இருந்து நீர் வரத்து நின்றுவிட்டால் நெல் உற்பத்தி வெகுவாக குறையும். குடிநீருக்கே அல்லாட வேண்டிய பரிதாப நிலைக்கு தமிழகம் தள்ளப்படும் என்பதும் நீர்வள ஆர்வலர்களின் கூற்று.

மேகதாதுவால் சொட்டு நீரும் கிடைக்காது
கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும், கபினி அணையில் இருந்தும் வெளியேறும் தண்ணீர் சமவெளி, மலைப்பகுதிகளை கடந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு என்ற இடத்துக்கு வருகிறது. பிலிகுண்டுலுவில்தான், காவிரியில் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்று அளவிடப்படுகிறது. ஆனால், இப்போது பிலிகுண்டுலுவுக்கு முன்பே அதாவது கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணையை கட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்க கர்நாடக அரசு ஆயத்தமாகிவிட்டது. காவிரி பெரும் அருவியாக கொட்டும் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த மேகதாது. கிருஷ்ணராஜ சாகர், கபினி மற்றும் பிலிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் தமிழகத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தண்ணீர் அந்த இடத்தில் தடுத்து நிறுத்தப்படும். இதனால் பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறிதான்.

சுயநலத்தால் நீர் திறக்க மறுப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரியாறு, கர்நாடகாவில் 320 கிலோ மீட்டர், தமிழக-கர்நாடக எல்லையில் 64 கிலோமீட்டர், தமிழகத்தில் 416 கிலோ மீட்டர் பாய்ந்து கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் காவிரியின் துணையாறுகளின் குறுக்கே கபினி, கேஆர்எஸ், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணையில் 15.67 டிஎம்சி, ஹேரங்கி அணையில் 8.07 டிஎம்சி, ஹேமாவதி அணையில் 35.76 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன் உபரிநீர் கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையில் சேமிக்கப்படுகிறது. இதன் கொள்ளளவு 45.05 டிஎம்சி. இந்த வகையில் மொத்தமுள்ள 4 அணைகளின் மூலம் 104.55 டிஎம்சி தண்ணீரை, கர்நாடகம் தேக்கி வைத்துக் கொள்கிறது. இதனால் கர்நாடகாவின் உபரிநீர் மட்டுமே தமிழகத்தின் உயிர்நீராக வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி ஆண்டு தோறும் கர்நாடகம், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு அந்தளவு தண்ணீர் திறந்துவிடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பெருமழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதியே நீரை திறந்து விடுகின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு, காவிரி பாய்ந்து வரும் மேகதாது என்னுமிடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்டி நீரை தேக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய நீர்வளத்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1980களிலேயே தீட்டப்பட்ட சதி
கர்நாடகாவில் குண்டுராவ் முதல் அமைச்சராக இருந்தபோதுதான் மேகதாது அணை கட்டுவதற்கான திட்டம், 1980களிலேயே தீட்டப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த அத்திட்டத்தை 2012ல் கர்நாடக அரசு மீண்டும் கையில் எடுத்தது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்றும், மீறி கட்ட முயன்றால் எந்த சூழ்நிலையிலும் தமிழகம் அனுமதிக்காது என்றும் கடுமையாக தனது எதிர்ப்பை அப்போதே பதிவு செய்தது தமிழ்நாடு. ஆனால், அதை கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கையை தயாரிப்பதற்காக 2015ம் ஆண்டு கர்நாடக அரசின் பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தகோரி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Tags : Delta ,Neutral Desert ,Tamil Nadu ,Atavada ,Karnataka , Karnataka, Tamil Nadu, Ore, Delta Irrigation, Megha Dadu Dam
× RELATED காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்...